அசரீரீ

ஆழி பதிப்பகத்துல இருந்து சுஜாதா நினைவு அறிவியல் புனைவு சிறுகதைகளுன்னு ஒரு போட்டி வைச்சாங்க. அதுல கலந்துகிட்டு நான் எழுதிய கதை. ‘இப்டி இருந்திருந்தா?’-ன்னு ரொம்ப நாளாவே நான் மனசுல இருந்த ஒரு எண்ணத்தோட சிறுகதை வடிவம். இப்டி ஒரு சிறுகதையா வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கொடுத்த ஆழிக்கு நன்றி.

அசரீரீ

டைசி நேர பயண ஆயத்தங்களை சரிபார்த்துக்கொண்டிருந்தான் சூர்யா, ‘யு ஆர் என்’ தேசத்து விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தலைமை விஞ்ஞானி. ஆராய்ச்சி மையத்தின் புத்தக அறை, சோதனைக்கூடம், தன் வீட்டு புத்தக அறை, வீட்டிலேயே இருக்கும் ஆராய்ச்சிக்கூடம், இவைகள் தவிர மற்ற எதிலும் அதிக நாட்டம் இல்லாதவன். மூவாயிரம் வருடங்களுக்கு முன் விண்வெளி ஆராய்ச்சி செய்தவர்கள் எழுதிய புத்தகங்களிலிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன் ஆராய்ச்சி செய்தவர்கள் எழுதிய புத்தகங்கள்வரை அத்தனையும் அவனுக்கு அத்துப்படி. பல ஆராய்ச்சியாளர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் ஆராய்ச்சி செய்த விதம், அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள், அவர்கள் தீர்வுகாணாத ஃபார்முலாக்கள், ஆராய்ச்சிகளுக்கு அவர்கள் பயன்படுத்திய உயிரினங்கள், அவைகளுக்கு வழங்கப்பட்ட உணவு வகைகள், பழ வகைகள், அவற்றின் குணாதியங்கள் என அனைத்துத் தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தான்.

மானிட்டர்கள் சரியான சிக்னல்களை அறிவித்துக்கொண்டிருந்தன. வெளியில் சூரியனின் பிரகாசம் அவன் கண்ணைக் கூசச் செய்துகொண்டிருந்தது. தட்ப வெப்பம், காற்றழுத்தம் என அனைத்தும் விண்வெளிப் பயணத்திற்கு சாதகமாக இருப்பதை சரிபார்த்துக்கொண்டான். ஆய்வுக்கூடத்திற்கு வெளியில் ராட்சத விண்கலம் ஒன்று புறப்படத் தயார் நிலையிருந்தது. சூர்யா, அவனுக்கு முன் இருந்த கணிணிகளை ஆயத்தப்படுத்த, அந்த ஆய்வுக்கூடம் முழுதும் ஆங்காங்கே இருந்த அனைத்துக் கடிகாரங்களும் 40:00:00 என்று ஒளிரின. அருகில் இருந்த திரையில் மின்னிய பல எண்களின் இடையே 30:00:00 என்ற எண்களை திணித்தான். திரைகளின் நடுவில் இருந்த மைக்கை ஆன் செய்து, “கடைசி நேர ஆயத்தங்கள் முடிந்துவிட்டன. லாஸ்ட் ஃபார்ட்டி மினிட்ஸ். ஃபைனல் கவுண்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்” என்று அறிவித்துவிட்டு ஒரு பட்டனை அழுத்தினான். 39:59:99 என்று நிமிடங்கள் குறையத் தொடங்கின.

அவசரமாக வேறு சில பட்டன்களை தட்டி தயார்ப்படுத்தினான். வெளியில் நின்ற ராட்சத விண்கலம் தன் மேல்புறத்தை உள்நோக்கி இழுத்து மூடிக்கொண்டு, அடிப்புறம் வழியாக பெருமூச்சு விட்டது. கணிணித் திரைகளுக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த புகைப்படம் மற்றும் வேறு சில பொருட்களையும் எடுத்துக்கொண்டு, எட்டுக்கால் பாய்ச்சலில் பாய்ந்து பின்புற வாசல் வழியாக வெளியில் வந்தான். அவனது வாகனம், அவன் வருகையை உணர்ந்து, திறந்துகொண்டு ‘வெல்கம்’ என்றது. அதில் ஏறிக்கொண்டான். உள்ளேயிருந்த கடிகாரம் 38:40:19 என்று குறைந்துகொண்டிருந்தது. ராட்சத விண்கலத்தைத் திரும்பிப் பார்த்து ‘உங்கள் பயணம் இனிதே அமையட்டும்’ என்று வாழ்த்திவிட்டு புறப்பட்டான்.

38:35:08.

ஆராய்ச்சி மையத்தில், கணிணித் திரைகளுக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த அவனது மானசீக குரு, ‘அறிவியல் தந்தை’ என்று அழைக்கப்பட்ட ‘ஹரூட்டோ’-வின் புகைப்படத்தை எடுத்து வாகன இருக்கையின் முன்பக்கம் வைத்துவிட்டு வணங்கிவிட்டு வாகனத்தின் வேகத்தைக் கூட்டினான்.

ஹரூட்டோ, மூவாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த முதல் தலைமுறை விஞ்ஞானி. கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சிகளின் முன்னோடி. ‘நாம் வாழும் இந்தக் கிரகம் சூரியனை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றது’ என்றும், ‘இந்தக் கிரகத்தைப் போலவே இன்னும் பல கிரகங்கள் சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கின்றன’ என்றும் முதன் முதலில் கண்டுபிடித்து அறிவித்தவர் அவர்தான். மற்ற ஆராய்ச்சியாளர்கள், அவரது கண்டுபிடிப்புகளை அன்று ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், பின்னாட்களில் ஏற்றுக்கொண்டு, அவர்கள் கண்டுபிடித்த அண்டை கிரகத்திற்கு ஹரூட்டோ என்று அவர் பெயரையே சூட்டினார்கள். இன்று சூர்யா தயார்படுத்திய ராட்சத விண்கலம் இன்னும் 36:12:45 நிமிடங்களில் ஹரூட்டோ கிரகத்திற்குப் புறப்பட தயாராயிருந்தது.

கடிகாரம் ‘முப்பந்தைந்து நிமிடங்கள்’ 36:00:00 என்று அறிவித்துவிட்டு இன்னும் குறையத்தொடங்கியது. சூர்யா வண்டியின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினான்.

அறிவியற் தந்தை, ஹரூட்டோவின் மற்றொரு முக்கியமான கண்டுபிடிப்பு அவரது ஆய்வுகளுக்கு உதவி செய்வதற்காக அவரே வடிவமைத்த இரண்டு மாடல் ‘ரோபோ’க்கள். முதல் மாடல் ரோபோவிற்கு ‘ஹீபோ’(Heebo) என்றும், இரண்டாவது மாடல் ரோபோவிற்கு ஷீபோ(Sheebo) என்றும் பெயரிட்டிருந்தார். நடந்து செல்ல இரண்டு கால்கள், தேவையான பொருட்களை எடுக்க இரண்டு கைகள், எதிரில் இருப்பவைகளைப் பார்க்க இரண்டு பவர்ஃபுல் கேமராக்கள், சூரியக் கதிர்களில் இருந்து அதன் உட்பாகங்களை மறைத்துக் காக்க ஒரு நவீன கவர், அதிகமான தகவல்களை சேகரிக்கும் மெமரி, அந்தத் தகவல்களில் இருந்து தேவையான தகவல்களை தேவையான நேரத்தில் சரியாகவும், சீக்கிரமாகவும் தரும் திறம் வாய்ந்த ப்ராஸஸ்ஸர் என அவர் வடிவமைத்த ‘ரோபோ’க்கள் இந்த கிரகத்து கண்டுபிடிப்புகளின் முன்னோடியாகத்தான் இருந்தன. அவரது கட்டளைகளை சிறப்பாக செயல்படுத்தியதோடு, தகவல் களஞ்சியமாகவும் இருந்து அவரது ஆராய்ச்சிகளில் பெரும் பங்கு வகித்தன. இந்தக் கிரகத்தின் முதன் முதல் சிம்மெட்ரிக்கல் வடிவம் அந்த இரண்டு ரோபோக்களும்தான். இன்று இந்த கிரகம் முழுவதும் பரவியிருக்கும் பல கோடி ரோபோக்களின் மூலமும் அவைதான். ‘யு ஆர் என்’ தேசத்திற்காக சூர்யா தயாரித்து, இன்னும் 33:54:07 நிமிடங்களில் ஹரூட்டோ கிரகத்தை நோக்கிப் பயணிக்கத் தயாராயிக்கும் ராட்சத விண்களத்தில் பல ஆயிரம் ரோபோக்கள் ஏறியிருந்தனர்.

ரோபோக்களை தயாரிக்க பின்பற்றிய அத்தனை விதிமுறைகளையும், வழிமுறைகளையும் புத்தகமாக வெளியிட்டிருந்தார் ஹரூட்டோ.(சூர்யா பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்த ஒரே ஒரு பதிப்பைத் தவிர மற்ற அனைத்து பதிப்புகளும் அழிக்கப்பட்டிருந்தன.) ரோபோக்களுக்கு கொடுக்கப்பட்ட உணவு மற்றும் பழ வகைகளைப் பற்றியும், அந்த உணவுகள் அவைகள் உடல்களில் ஏற்படுத்திய ரசாயண மாற்றங்களைப் பற்றியும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். சில வகை உணவுகள் ஏற்படுத்திய மோசமான விளைவுகளையும், சில குறிப்பிட்ட வகைப் பழங்கள், அந்த ரோபோக்களின் மையக் கட்டுப்பாட்டு அறையை மிகவும் சேதமடையச் செய்தததையும் விளக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.

கடிகாரம் ‘முப்பது நிமிடங்கள்’ 30:00:00 என்று அறிவித்தது. சூர்யா வண்டியை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு இறங்கினான். தான் கொண்டுவந்த புகைப்படத்தையும் மற்ற பொருட்களையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்று தன் வீட்டு ஆய்வுக்கூடத்திற்குள் நுழைந்தான். உள்ளேயிருந்த கடிகாரம் 29:51:11 என்று நிமிடங்களைக் காட்டி அவசரப்படுத்திக்கொண்டிருந்தது. ஓரமாக, திரைகள் போட்டு மூடி வைத்திருந்த சிறிய அறையின் கதவுகளைத் திறந்தான். உள்ளேயிருந்து இரண்டு ரோபோக்கள் ‘ஹாய்’ என்றன. விஞ்ஞானி ஹரூட்டோவின் விதிகளை இம்மி பிசகாமல் பின்பற்றி ஹீபோ மாடல் ரோபோ ஒன்றையும் ஷீபோ மாடல் ரோபோ ஒன்றையும் தயாரித்திருந்தான் சூர்யா. பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்று ஹரூட்டோ குறிப்பிட்டிருந்த எந்த உணவு, பழ வகைகளையும் அவைகளுக்குக் கொடுக்காமல் பாதுகாத்து வந்தான். அவன் தயாரித்த அந்த ரோபோக்கள் பற்றி வெளியில் தெரியாமல் இருக்க, அவைகளை ஒரு சிறிய அறையில் வைத்து மூடியிருந்தான்.

ஹரூட்டோ எழுதிய புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில், ரோபோக்களின் உடலில் சில வகைப் பழங்கள் ஏற்படுத்திய மோசமான ரசாயன மாற்றங்களை விளக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். முதல் மாற்றமாக, அவர் கண்டுபிடித்த இரண்டு ரோபோக்களும் அவரது கட்டளைகளையே ஏற்க மறுக்க ஆரம்பித்திருக்கின்றன. தமக்குத்தானே கட்டளைகளை வழங்கிக்கொண்டு தாமே இயங்க ஆரம்பித்திருக்கின்றன. அவை இரண்டும் இணைந்து, தானே வளரும், புதிய, சிறிய ஹீபோ மாடல் ரோபோக்களையும் ஷீபோ மாடல் ரோபோக்களையும் உருவாக்கத் தொடங்கியிருக்கின்றன. புதிதாக உருவான ரோபோக்கள் வளர்ந்து பின் மேலும் பல ரோபோக்களை தாமே உருவாக்கியிருக்கின்றன. அப்படி உருவான ரோபோக்கள் இந்தக் கிரகம் முழுவதும் இடம்பெயரத் தொடங்கியிருக்கின்றன.

ஹரூட்டோவின் மறைவிலிருந்து, இன்று வரையிலான சில ஆயிரம் வருடங்களில், இந்தக் கிரகம் முழுதும் பரவிய இந்த ரோபோக்களின் இன்றைய எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டியது. இவைகளின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக பிரச்சனைகளும் அதிகமாயின. சக்திவாய்ந்த ப்ராஸஸ்ஸர்களின் பலத்தால் அவை மற்ற உயிரினங்களின் மீது தங்கள் ஆளுமையை செலுத்த ஆரம்பித்தன. ஆளுமைக்குக் கட்டுப்பட்ட உயிரிங்கள் தவிர மற்ற உயிரினங்களையெல்லாம் அழித்து உணவாக உண்ணத்தொடங்கின. பல குழுக்களாகச் சேர்ந்த ரோபோக்கள் தங்களுக்கென புதிய தேசங்களை உருவாக்கிக்கொண்டன. தங்கள் தேசத்திற்கென புதிய எல்லைகளையும் புதிய விதிகளையும் உருவாக்கின. மற்ற உயிரினங்களின் ஆளுமையைச் செலுத்திய ரோபோக்கள், கொஞ்சம் கொஞ்சமாக அண்டை தேசத்து ரோபோக்கள் மீதும் ஆளுமையைச் செலுத்தத் தொடங்கின. ஆளுமைக்கு உட்படாத அண்டை தேசத்து ரோபோக்களை அழிக்கத்தொடங்கின. ஆளுமைக்குக் கட்டுப்படாத உயிரினங்களையும் அண்டை தேசத்து ரோபோக்களையும் அழிக்க புதிது புதிதாக ஆயுதங்களை உருவாக்கத் தொடங்கின. கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளையும் புத்தகங்களையும் அழித்துவிட்டு, புதிய ஆயுதங்கள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளைச் செய்யும்படி ஆணையிட்டன. அதற்கு அடிபணியாத ஆராய்ச்சியாளர்களையெல்லாம் அழிக்கத் தொடங்கின.

அதிகமான ஆயுதங்களைத் தயாரித்து, மற்ற தேசத்து ரோபோக்களையெல்லாம் அடிமைப்படுத்தி, தனது ஆளுமை எல்லைகளை விரிவாக்கிக்கொண்டிருக்கும் ‘யுனைட்டட் ரோபோ நேஷன்’ (யு ஆர் என்), சூர்யாவை மட்டும் அண்டை கிரகங்களில் ரோபோக்கள் குடியேறுவதற்கான சாதகங்களைப் பற்றிய ஆராய்ச்சியிலும், அங்கே செல்வதற்காக ஒரு ராட்சத விண்கலம் உருவாக்கும் பணியிலும் ஈடுபடச்செய்தது. அவனுக்காக ஒரு விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைத்து அவனைத் தலைமை விஞ்ஞானியாக நியமித்தது.

அண்டை கிரகமான ஹரூட்டோ கிரகத்தில், ரோபோக்கள் வாழ்வதற்கான எல்லா வசதிகளும் இருப்பதாகவும், மலைகளும், மரங்களும், காற்றும், நீரும், தட்பவெப்பமும் என சகலமும் சாதகமாக இருப்பதாக சூர்யா கண்டுபிடித்து சொன்ன பொழுது அவை பெரிதும் மகிழ்ச்சியடைந்தன. ஒரு ராட்சத விண்கலத்தை சூர்யா வடிவமைத்ததும், ‘யு.ஆர்.என்’ தேசத்து ரோபோக்கள் அனைத்தும் அதில் ஏறி ஹரூட்டோ கிரகத்திற்கு சென்றுவிட திட்டம் தீட்டின. அப்படி அவர்கள் புறப்பட்ட பத்தாவது நிமிடம் இந்தக் கிரகமும், அதில் இருக்கும் மற்ற ரோபோக்களும், சூர்யாவும் வெடித்து சிதறுவதற்கான ஆயுதங்களையும் தயார் செய்தத் தொடங்கின.

இந்தத் திட்டங்களை தெரிந்துகொண்ட சூர்யா, அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் ராட்சத விண்கலம் தயாரிக்கும் வேலையை செய்துகொண்டிருந்தான். அப்படிச் செய்துகொண்டிருக்கும்போதே, தன் வீட்டில், விஞ்ஞானி ஹரூட்டோவின் விதிகளைப் பின்பற்றி இரண்டு மாடல் ரோபோக்களையும், சிறிய விண்கலம் ஒன்றையும் ரகசியமாகத் தயாரித்துக்கொண்டிருந்தான்.

இன்று, ‘யு. ஆர். என்’ தேசத்து ரோபோக்கள் அனைத்தும் ராட்சத விண்கலத்தில் ஏறியபின் விண்கலத்தை மூடிவிட்டு, அவர்கள் புறப்பட்டு பத்து நிமிடங்கள் கழித்து வெடிப்பதாக இருந்த ஆயுதங்களை புறப்படுவதற்குப் பத்து நிமிடங்கள் முன்னரே வெடிக்கும்படி மாற்றியமைத்துவிட்டு எட்டுக்கால் பாய்ச்சலில் ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து வெளியேறியிருந்தான்.

கடிகாரம் 23:00:00 நிமிடங்கள் என்று அறிவித்தது. சூர்யா, அவன் தயாரித்த ஹீபோ, ஷீபோ மாடல் ரோபோக்களை அவன் வீட்டின் பின்புறம் தயாராக இருந்த சிறிய விண்கலத்தில் ஏற்றினான். தன் வாகனத்தில் வைத்திருந்த ஹரூட்டோவின் புகைப்படத்தை எடுத்து விண்கல இருக்கையின் முன் வைத்தான், வணங்கினான். விண்கலத்தை விண்ணில் செலுத்தத் தயாரானான். வெளியில் நீண்டிருந்த தன் ஒற்றைக் கண்ணை உட்புறமாக இழுத்துக்கொண்டான். நீண்ட கழுத்தை உடலுக்குள் இழுத்து சுருக்கிக்கொண்டான். உடலைச் சுற்றி இருக்கும் தடிமனான பல வால்களை சுருட்டிக்கொண்டான். கடைசி வாலால் சில பட்டன்களைத் தட்டிவிட்டு அதையும் சுருட்டிக்கொண்டான். கடிகாரம் ‘இருபது நிமிடங்கள்’ 20:00:00 என்று அறிவித்தபோது விர்ர்ர்ர்ர்ர்ரினான்.

அடுத்தப் பத்தாவது நிமிடம், விண்வெளிப் பயணத்திற்காகக் காத்திருந்த ‘யு.ஆர்.என்’ தேசத்து விண்கலமும், அதிலிருந்த ரோபோக்களும், அந்தக் கிரகமும், மற்ற ரோபோக்களும் வெடித்துச் சிதறின.

நீண்ட பயணத்திற்குப் பிறகு, மீண்டும் தன் கழுத்தை நீட்டி, தன் ஒற்றைக் கண்ணை வெளியில் கொண்டுவந்து, விண்கலத்திற்கு வெளியில் பார்த்தான் சூர்யா. ஹரூட்டோ கிரகம் கண்ணில் தெரிந்தது. நீலமும் பச்சையுமாகத் தெரிந்த கிரகம், அருகில் வர வர மலைகளும், மரங்களும், கடலும், நதிகளுமாகக் காட்சியளித்தது. ஹரூட்டோ கிரகத்தின் மிக அருகில் வந்தபோது விண்கலம் தீப்பற்றி எறியத் தொடங்கியது. சூர்யாவும், ரோபோக்களும் இருந்த இருக்கைகள் மட்டும் விண்கலத்திலிருந்து பிரிந்து சிவப்பு நிற பழங்கள் காய்த்துக் குலுங்கிய தோட்டத்தை நோக்கி வந்து விழுந்தன. பலத்த தீக் காயங்களுடன் சூர்யா, உயர்ந்து வளர்ந்த மரம் ஒன்றில் மாட்டித் தொங்கிக்கொண்டிருந்தான். விண்கலம் வெகு தூரத்தில் சென்று விழுந்து நொறுங்கியது. சூர்யா கொண்டு வந்திருந்த அறிவியற் தந்தையின் புகைப்படமும் விண்களத்துடன் எரிந்து சாம்பலானது. ரோபோக்கள் அமர்ந்திருந்த இருக்கைகள் மட்டும் பத்திரமாக விழுந்து, இரண்டு ரோபோக்களும் எந்தவித காயங்களும் இல்லாமல் விழுந்து, எழுந்து நின்றன.

அவர்கள் வந்து விழுந்த தோட்டத்தில் காய்த்துக் குலுங்கிய சிவப்பு நிறப் பழங்கள், ‘அறிவியற் தந்தை’ ஹரூட்டோ தயாரித்த ரோபோக்களின் உடலில் மோசமான ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தியப் பழங்களை சூர்யாவிற்கு நினைவுபடுத்தின. உயர்ந்த மரத்தில் ஊசலாடிக்கொண்டிருந்த அவன், ரோபோக்களைப்பார்த்து, தன் கடைசி வார்த்தைகளாக ‘அந்தச் சிவப்பு நிறப் பழங்களை மட்டும் உண்ணாதீர்கள்’ என்று கத்தியது அசரீரீ போல் ஒலித்தது.

ஷீபோ மாடல் ரோபோ அந்தப் பழத்தைப் பறிப்பதற்காக எம்பிக் குதித்தது.