நம்பகம்.

‘என்னங்க, என் ச்சப்பல்ல குஷன்லாம் சுத்தமா போய்டுச்சுங்க, போட்டுட்டு நடந்தாலே காலை வலிக்குதுங்க’ என்று ஆரம்பித்தாள் என் மனைவி.
‘முருகா!! நாட்ல நல்லவங்களுக்கு மட்டுமே ஏம்பா சோதனைகளை கொடுக்கற?’ என்றேன் நான்.
கிரைண்டர் ஸ்லோவா ஓடுது, மிக்ஸில சட்னி சரியா அரைபட மாட்டேங்குது, ஃப்ரிட்ஜ்ல ஃப்ரீஸர் டீ-ஃப்ராஸ்ட் ஆகவே மாட்டேங்குது இப்டி எதுல என்ன ப்ரச்சனை வந்தாலும் உடனே புதுசா ஒன்னு வாங்கிடணும் என் மனைவிக்கு. அதுவரைக்கும் அர்ச்சனைதான். ஒவ்வொரு முறை சட்னி அறைபடும் போதும் என் காதுகளும் அறைபடும். கிரைண்டர் கல் உருளும் போது என் தலையும் உருளும்.

‘இதுக்கு ஏன் முருகனைக் கூப்டறீங்க, செருப்புன்னா தேயத்தான் செய்யும். தேயாத செருப்பா இரும்புல ஒன்னு வாங்கித்தந்துடுங்க, காலத்துக்கும் போட்டுக்கறேன்!!’
‘செருப்பு தேயாதுன்னு சொல்லலடி, அதுக்குன்னு மூனு மாசத்துலயேவா?’
‘மூனு மாசத்துல தேஞ்சுடும் தெரிஞ்சேவா வாங்குவாங்க? இல்ல புதுசு வாங்கணுமே-ன்னு ஆளு வெச்சுத் தேய்க்கறேனா!!’
‘இல்லதாண்டி, அதுக்காக மூனு மாசத்துக்கு ஒரு முறை ஒரு செருப்பு வாங்க முடியுமா?’
‘இது வாங்கி ஒன்னும் மூனு மாசம் ஆகலை, மார்ச் மாசம் வாங்கினது’
‘அப்டி பார்த்தாலும், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை-இன்னும் நாலு மாசம் கூட ஆகலியே’
‘ஆமா எனக்கு ஏதாவது ஒன்னு வேணும்னா மட்டும்தான் எல்லாக் கணக்கும் பார்ப்பீங்க!! எட்டணாவுக்கும் ஒர்ரூவாக்கும்!!’
‘நான் வாங்கினதுக்கு அப்புறம் செருப்பு வாங்கினாங்க உங்க அக்கா, நேத்து வந்திருந்தாங்களே, பார்த்தீங்கல்ல, வேற செருப்பு மாத்திட்டாங்க!!
ஓ அதுக்காகத்தானா இவ்வளவும்!! என்று நான் நினைத்ததை என் முகம் காட்டிக்கொகெடுத்துவிட்டது.
‘அவங்க வாங்கிட்டாங்க-ங்கறதுக்காக..!!’ நான் சொல்லி முடிக்கவில்லை.
‘வேண்டாங்க.. வேண்டாம், எனக்கு செருப்பே வேண்டாம். யார் எப்புடி வேணும்னாலும் இருந்துட்டுப் போவட்டும், நான் வெறும் கால்லயே நடந்துக்கறேன். செருப்பு போடாம என் கால் என்ன தேஞ்சுடவா போகுது. முந்நூறு ரூபாக்குகூட வக்கில்லாதவளாவே இருந்துட்டுப்போறேன்.’
புதுச் செருப்பு வாங்கற வரைக்கும் இனிமே இப்படித்தான்.

கொஞ்ச நேர அமைதியை என் மனைவிக்கு வந்த செல்ஃபோன் அழைப்பு களைக்கின்றது.
‘ஹலோ!! ம்மா.. ஹலோ நான் பேசறது கேக்குதாம்மா? ஹலோ!? ஹலோ!’ ஹாலில் இருந்து ஹலோ, சமையலறையிலிருந்து ஹலோ-ன்னு பல ஹலோக்கள் என் இரண்டு காதுகளிலும் மாறி மாறி எதிரொலித்ததே தவிர அவள் அம்மாவிற்கு ஒலித்ததாக தெரியவில்லை.
(இந்த நேரத்தில் என் மாமியாருக்கு மந்தமான காதுகள் இல்லை, என்பதையும் சொல்லிவிடுகிறேன்)

இன்றைக்கு தேய்ந்த செருப்புக்காக நடக்கும் இதே மாதிரியான காட்சிகள் போன மாசத்துல ஒரு முறையும், போன வாரத்துல ஒரு முறையும் நடந்துச்சு. இதே ‘ஹலோ ஹலோ’ செல்ஃபோனுக்காக, அவள் பேசுவது மறுமுனையில பேசறவங்களுக்கு கேட்கவே இல்லாலதால வெறு செல்ஃபோன் வாங்கணும்னு கேட்டு.

நான் பொதுவாவே கொஞ்சம் விவரமானவன். எது ரிப்பேரானாலும் நானே முயற்சி செஞ்சு சரி செஞ்சிடுவேன். முடியாத பட்சத்துல தெரிஞ்ச, நம்பகமானவர்கள்கிட்ட கொடுத்து சரி செஞ்சுப்பேன். ஃபேன், ரேடியோ, டி வி உட்பட வீட்டில் இருக்கும் மின் மற்றும் மின்னணு உபயோகப் பொருட்கள் பலதும் இதுல அடங்கும். நம்பகமான ஆட்களை தேர்வு செய்யறதுக்காக பல பரிசோதனைகளை வைப்பேன். ஏதாவது பழுதாய்டுச்சுன்னா அதை சரி செய்ய இரண்டு மூன்று கடைகள்ல விசாரிச்சு, குறைவாக சொல்ற, நயமாப் பேசற ஆளுங்ககிட்ட அதை சரி செய்யக் கொடுப்பேன். ஒரு முறை குறைஞ்ச செலவுல நல்லா சரிசெஞ்சு கொடுத்துட்டு, எதுனால பழுதாச்சுன்னு தெளிவா, புரியற மாதிரி, நயமா எடுத்து சொல்லிட்டா போதும். அடுத்த தடவை ஏதாவது சரியா வேலை செய்யலன்னா அதே கடைக்குத்தான் எடுத்துட்டுப் போவேன். ரெண்டு மூனுதடவை அதே கடைக்குப் போனப்புறம் அவரை நம்பகமானவர்கள் வரிசையில் சேர்த்துக்குவேன்.

அப்படித்தான் போன மாசமும் மனைவியோட செல்ஃபோன் பழுதானதும் அதை சரி செய்ய டீலர்கிட்ட கேட்டேன். அவங்க ‘ரெண்டு மூன்று நாட்கள் ஆகும்’-ன்னாங்க. இன்னும் சில கடைகள்ல சரியாவே பதில் சொல்லல. அப்புறம் ஒரு கடைல கேட்டேன்,
‘சார் இதுல மைக் போய்டுச்சு, நான் பேசறது அந்தப் பக்கம் பேசறவங்களுக்கு கேக்கவே இல்லை, மைக்க மாத்தித் தர முடியுமா?’-னு விளக்கிச் சொன்னேன்.
‘ஃபோன் கீழ விழுந்துதா சார்?’-ன்னு கேட்டாரு அந்தக் கடைக்காரரு.
‘ஆமாசார்’
என் போன்ல இருந்து அவர் போனுக்குக் கால் பண்ணி, ஹலோ ஹலோ-ன்னு என் போன்லயும் அவர் போன்லயும் மாத்தி மாத்தி சொல்லி, காதுல வெச்சுப் பார்த்தாரு.
‘சரி சார், ஐநூறு ரூபா ஆகும், பரவாயில்லையா?’
ஆறாயிரம் ரூபா கொடுத்து புது ஃபோன் வாங்க வைக்காம, ஐநூறு ரூபாய்லயே வேலை முடியுதே-ன்னு எனக்கு ரொம்ப சந்தோஷம்.
‘சரிசார்’
‘பணத்தை கவுண்டரில் கட்டிடுங்க, ஒரு அரை மணில வாங்க, ரெடி பண்ணிடறேன்’.-ன்னாரு.
பணத்தை கட்டினதும்,
‘இந்தாங்க சார், மெமரி கார்டு, சிம் கார்டு, பேட்டரி. ஜாக்கிறதையா வெச்சுக்கோங்க. வேற கடைகள்ல கொடுத்தாலும் இதையெல்லாம் கொடுத்துடாதீங்க. மாத்தினாலும் மாத்திடுவாங்க.’ இவ்ளோ நியாயமானவரா இருக்காரே-ன்னு உடனேயே அவரை என்னோட நம்பகமானவர்கள் வரிசைல சேர்த்துக்கிட்டேன்.
‘சொன்ன மாதிரியே அரை மணில சரி செஞ்சுக் கொடுத்துட்டாரு. அங்கேயிருந்தே வேற நம்பருக்கு கால் பண்ண சொல்லி,
‘நல்லா கேக்குதுல்ல சார், திருப்திதான?’ என்று எனது திருப்தியை உறுதிப்படுத்திக்கொண்டார்.

ஆனா போன வாரம் திரும்பவும் அதே மாதிரி பிரச்சனை. என் மனைவி பேசறது எதிர் முனைக்காரங்களுக்கு கேட்காம போய்டுச்சு. திரும்பவும் அவர்கிட்டயே எடுத்துட்டுப் போனேன்.
‘தண்ணி ஏதும் பட்டுச்சாசார்’
‘தெரியலை சார், என் மனைவியோடது. சமையல் அறைல வெச்சிருக்கும்போது ஏதாவது பட்றுச்சோ என்னவோ!!’
‘அப்டிதான் சார் இருக்கும். போனவாட்டியும் நம்மகிட்டயே மைக் போட்றுக்கீங்க, அதுனால இந்த முறை வெறும் முந்நூறு குடுங்க சார் போதும். ஸ்பேர் பார்ட்டுக்கு மட்டும் கொடுங்க, லேபர் எதுவும் வேண்டாம்’-ன்னு சொல்லிட்டாரு. நாட்ல இவங்களை மாதிரி நாலு பேர் இருக்கறதுனாலதான் மழையே பெய்யுது-ன்னு நெகிழ்ந்து போய்ட்டேன்.

இன்னிக்குத் திரும்பவும் அதேப் ப்ராப்ளம். எங்கேயாவது தண்ணீல ஃபோனைப் போட்டுட வேண்டியது. அப்புறம் ஹலோ ஹலோன்னா எப்படி கேட்கும். சரி செய்யக் கடைக்கு எடுத்துட்டுப் போனேன்.

துரதிஷ்டவசமா அந்தக் கடை மூடியிருந்ததால, வேற கடைக்கு போக வேண்டியதா ஆய்டுச்சு.
‘சார், இந்த ஃபொன்ல மைக் போய்டுச்சு, நான் பேசறது எதிர் முனைல இருக்கறவங்களுக்கு கேட்கவே மாட்டேங்குது. அதை மாத்தித் தர முடியுமா?’
‘மைக் போய்டுச்சா?’
ஃபோனை வாங்கிப் பார்க்கிறார்.
‘மைக் போய்றுக்காது சார். மைக்கெல்லாம் ஃபோனோட மதர் போர்டுலயே வர்றது. அப்டியே போனாலும் எடுத்துட்டெல்லாம் போட முடியாது. மதர் போர்டு சர்க்யூட்லயே இம்பிள்ட்-சார்’
ஃபோனைப் பிரித்துப் பார்த்துக்கொண்டே,
‘அப்டியே மாத்தி சால்டரிங்கெல்லாம் பண்ணினாலும், கீ பேடெல்லாம் முட்டிக்கிட்டு நிக்கும், ஃபோனை சரியா மூடவே முடியாது.’
என் போனில் இருந்து அவர் ஃபோனுக்கு கால் பண்ணினார். என் ஃபோனில் கீழ்ப்பகுதியை நல்லா அழுத்திப் பிடிச்சுக்கிட்டு பேசினாரு. அப்புறம் அவர் போனை என்கிட்ட கொடுத்து, ‘கேக்குதாப் பாருங்க’-ன்னாரு.
அந்தப் பக்கம் அவர் என் போன்ல பேசினது எனக்கு நல்லா கேட்டுது.
‘ஒன்னும் இல்ல சார், கீழ மைக் இருக்குற எடத்துல ஸ்க்ரூ கொஞ்சம் லூசா இருக்கு. டைட் பண்ணித் தர்றேன்’-ன்னு டைட் பண்ணிக்கொடுத்தாரு.
‘கீழ ஸ்க்ரூ அடிக்கடி லூஸாய்ட்டா ஒரு அஞ்சு ரூபாய்க்கு ‘ஃபெவி க்விக்’ வாங்கி இந்த ஓரத்துல போட்டுடுங்க சரியாய்டும்’-னாரு.
‘சர்விஸ் ச்சார்ஜெல்லாம் ஒன்னும் வேனா சார்’-ன்னுட்டாரு.

திரும்பி வரும்போது, மூடியிருந்த முந்தைய கடையப் பார்த்தேன். ‘திருப்பதி செல்ஃபோன் சர்விஸ்’-ன்னு போர்டுல லைட் மட்டும் எறிஞ்சுக்கிட்டு இருந்துச்சு. அந்தக் கடைக்காரன் கிட்ட இதுக்கு முன்னாடி சர்விஸ் பண்ணினதுக்கு எவ்ளோ கொடுத்தேன்னு உங்களுக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும். நான் என் மனைவிகிட்ட சொல்ல மாட்டேன். ஒருவேலை நீங்க அவங்களைப் பார்க்க நேர்ந்தாலும் சொல்லிட மாட்டீங்களே??