ஆடின்னாலே தள்ளுபடிதான்.

‘செட்டியாரே, கோல்டு பேப்பர் ஒன்னு, பச்சை பேப்பர் ஒன்னு, செகப்பு ஒன்னு’. ஆடிப்பெருக்கு அன்னிக்கு சப்பரத்துல/சப்பரதட்டில ஒட்றதுக்காக இப்டி பல வண்ணங்கள்ல பேப்பர் வாங்குவோம். பெரிய ஆளுயர சப்பரத்துல இருந்து தீப்பெட்டில செய்யற ‘மினி சப்பரம்’ வரைக்கும் வீதி நிறைய ஓடிட்டே இருக்கும். ஆடிப்பெருக்குக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடில இருந்தே சப்பரம் செய்யற வேலைகள் ஆரம்பமாய்டும். முந்தின வருஷம் பரண்ல போட்ட சப்பரத்தை எடுத்து ஆசாரிட்ட கொடுத்து சரி செஞ்சு தரச்சொல்லி அப்பாவை நச்சரிக்கணும், தீப்பெட்டி சப்பரத்துக்காக ரோட்ல கெடக்கற சோடா மூடியெல்லாம் எடுத்து நசுக்கி, தட்டி, சக்கரமா செய்யணும்-னு பல வேலைகள் மும்மரமா நடக்கும். யாரோட சப்பரம் அழகு, எதுல நெறைய வண்ணங்கள் இருக்கு, என்ன சாமி இருக்கு, கொடிகள் ஒட்டியிருக்கா, இல்ல வேல், சூலம், பூ மாதிரி டிசைன்கள் ஒட்டியிருக்கா இப்டி சக நண்பர்களுக்குள்ள போட்டிகள் இருக்கும்.

ஊரே இந்த நாள்ல வண்ண மயமா இருக்கும். காவேரி ஆத்துக்கும் அன்னிக்கு ஒரு புது அழகு வந்திருக்கும். ‘ஆடைகள்ல இத்தனை நிறமா’-னு வியக்கற அளவுக்கு அத்தனை நிறங்கள்ல ஆடைகள், முக்கியமா, தாவணிகள் போட்டுக்கிட்டு காவேரிக்கரைக்கு பெண்கள் வண்ணக் களஞ்சியமா வருவாங்க. கல்யாணம் ஆனவங்களுக்கு அவங்க தாலி நிலைக்கணும்-னும், கல்யாணம் ஆகாத ‘தாவணி’களுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்-னும் நல்ல கணவனா அமையணும்-னும் வேண்டிக்கிட்டு, மஞ்சள் கயிற்றை காவேரிக்கரைல இருக்கற அரச மரத்துல கட்டிட்டு அவங்களும் கழுத்துல கட்டிப்பாங்க. வாண்டு பசங்களுக்கெல்லாம் சும்மா கைல கட்டிவிடுவாங்க. பேரிக்காய், நாவற்பழம், மாம்பழம் இதேல்லாம் படைப்பாங்க.

காவேரிக்கரையில நின்னு கன்னிப் பெண்கள்லாம் சாமி கும்பிடும்போது, அரும்பு மீசைப் பசங்க, பக்கத்துல இருக்குற பாலத்து மேலருந்து ஆத்துல குதிச்சு அவங்க வீரத்த காட்டுவாங்க. குதிக்கறதுலயும் பல வகையா குதிப்பாங்க. ‘தண்ணி எம்பல்’, ‘சொறுகல்’-இப்டி பல பெயர்கள் சொல்லுவாங்க. குதிக்கும்போது உயரமா தண்ணி மேல எழும்பினா அதுக்குப் பேரு ‘தண்ணி எம்பல்’. யோகா பண்றப்போ உக்காந்திருக்கற மாதிரி பொசிஷன்ல காலை மடிச்சுகிட்டு, பின்பக்கமா, கொஞ்சம் சாய்ஞ்ச மாதிரி குதிச்சா தண்ணி மேலே எழும்பி பாலத்துல நின்னு வேடிக்கை பார்க்கறவங்களையும், கரைல நின்னு சாமி கும்பிடறவங்களையும் கொஞ்சம் நனைக்கும். ‘சொறுகல்’-னா கையை மேல தூக்கி, தேர்தல் நேரத்துல அரசியல்வாதிகள் கும்பிடு போடற பொசிஷன்ல வெச்சுகிட்டு, தலைகீழா அம்பு மாதிரி தண்ணிக்குள்ள போறது. இப்டி குதிச்சா தண்ணீர் அதிகம் எழும்பாது. ‘தண்ணி எம்பல்’ போட்டு குதிச்சு உள்ள குதிக்கற அரும்பு மீசைகள் உடனே வெளில வரமாட்டாங்க. உள்ளேயே கொஞ்ச நேரம் தம் புடிச்சு இருந்துட்டு, கொஞ்ச தூரம் தள்ளி போயி வெளில வருவாங்க. தண்ணீலருந்து வெளில வந்து, குதிக்கும்போது எவ்ளோ உயரம் தண்ணீர் மேல வந்துச்சு, யார் யார் மேலல்லாம் பட்டுது, குதிச்சத யார் யாரெல்லாம் கவனிச்சாங்க இப்டி பார்வைலயே பல கேள்விகள் கேப்பாங்க.

கரைல நின்னு சாமி கும்பிடற சில நிமிடங்கள்ல தாவணிப் பெண்கள் முகங்கள்லயும் பல ‘ரசங்களை’ப் பார்க்கலாம். பாலத்துல இருந்து தண்ணில குதிக்கறவரு தன்னோட ‘ஆளா’ இருந்தா,
‘அடப்பாவி இவ்ளோ உயரத்துல இருந்தா குதிக்கப்போற?’-னு கொஞ்சம் கோவம். குதிச்சு தண்ணிக்குள்ள போனவரு மேல வர்ற வரைக்கும், ‘எங்கடா போயி தொலைஞ்ச’-ன்னு ஒரு பதற்றம் கலந்த தேடல். மேல வந்தொன்ன ‘அப்பாடா’-ன்னு கொஞ்சம் நிம்மதி. மேல வந்தவனோட பார்வை வேற பக்கம் போனா ‘அங்க என்னடா நோட்டம் விடற’-னு ஒரு அனல் பார்வை. இத்தனையையும் கவனிக்கற ‘விஷயம்’ தெரிந்த தோழியைப் பார்த்து ‘இங்க என்னடி பார்வை’-னு கேள்வி. இந்தப் பார்வைப் பரிமாற்றங்களையெல்லாம் வேற யாரும் கவனிக்கறாங்களா-னு ஒரு எச்சரிக்கைப் பார்வை. இவ்வளவும் ஒருத்தன் தண்ணீல குதிச்சு வெளில வர்றதுக்குள்ள நடக்கும்.

இப்டியெல்லாம் ஆடிப்பெருக்கை பார்த்து ரசிச்ச காலம் போயி, இப்பல்லாம், ஆடின்னா தள்ளுபடிதான் ஆய்ட்டு வருது. காவேரிக் கரைகள்ல இப்பவும் கூட்டம் இருந்தாலும் தாவணிகள் கம்மிதான். சென்னையைப் பொறுத்தவரையிலும் ஆடிக்கொண்டாட்டம், தி.நகர்ல மட்டும்தான். வட மாநிலங்கள்லருந்து இறக்குமதி ஆன நடிகைகள் தொலைக்காட்சி விளம்பங்கள்ல ஆடி ஆடி விளம்பரம் செய்யறது மாசம்தான் ஆடி மாசம். துணிக்கடைகள்லயும், நகைக்கடைகள்லயும் ஒருத்தரை ஒருத்தர் தள்ளும்படி ஆறதுதான் ஆடித் தள்ளுபடி.