உண்மையில் உயர்ந்தவர்.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.

பொருள் : ஒருவர், உயர்ந்த பதவியில் இருந்தாலும், நிறைய செல்வங்கள் பெற்றிருந்தாலும், பண்புடையவராக இல்லையேல் உயர்ந்தவராக கருதப்படுவதில்லை. அதேபோல் பண்புடைய ஒருவர், ஏழையாக இருந்தாலும், உயர்ந்த பதவியில் இல்லாவிட்டாலும், தாழ்ந்தவராகக் கருதப்படுவதும் இல்லை.

தகாத செயல்கள் செய்த மிகப்பெரிய ஓட்டலதிபர்கள், பாலியல் பலாத்காரங்கள் மற்றும் பல விவகாரமான செயல்கள் செய்த ‘மத’த் தலைவர்கள், ‘வருமான வரி செலுத்தாத’ மிகப் பிரபலமான நடிகர்கள், கோடிகோடியாக ‘லஞ்சம்’ வாங்கி மக்களை ஏய்க்கும் அரசியல்வாதிகள், மக்கள் பணத்தை சுருட்டிய தொழிலதிபர்கள் என தங்களை ‘உயர்ந்தவர்களாக’க் காட்டிக்கொள்ளும் பலர், உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்களை உயர்ந்தவர்களாக நாமும் மதிக்க வேண்டுமா?? மதிக்கிறோமா??

உண்மையில் உயர்ந்தவர்: இந்தியாவை ‘சுனாமி’ தாக்கிய மூன்றாவது நாள், அமெரிக்காவில், நான் தினசரி வேலைக்கு செல்வதற்காக ரயில் ஏறும் ‘எடிசன்’ (Edison) ரயில் நிலையத்தில், நான், எனது மனைவி, எனது தம்பி என மூவரும் நிவாரண நிதி திரட்டிக்கொண்டிருந்தோம். நிறைய பேர் நன்கொடை தந்தார்கள், சிலர் ஓரிரு டாலர்கள் தந்தார்கள், சிலர் (சில இந்தியர்கள் உட்பட) எங்களை கண்டும் காணாததுபோல் இருந்தார்கள்.

நாங்கள் சற்றும் எதிர் பார்க்காது, அந்த ரயில் நிலையத்தை தினமும் கூட்டித் துடைக்கும் ‘ஸ்பானிஷ்’ மொழி பேசும், ஆங்கிலம் அதிகம் பேசாத ஒரு பெண், சில்லறையாக தன்னிடம் இருந்த சில டாலர்களைத் தந்து நெகிழச்செய்தார். நாங்கள் பேசிய ஆங்கிலத்தை புரிந்துகொள்ள முடியாத அருகிலிருந்த ‘ஸ்பானிஷ்’ மொழி பேசும் மக்களிடமும் ஏதோ எடுத்துக்கூறி நிவாரண நிதி தரவைத்தார். அவருடைய ஒருநாள் சம்பளம் அதிகம் இருக்காது. அவர் பெரிய செல்வந்தர் இல்லை. மிகப்பெரிய பதவியில் இருப்பவர் அல்ல. ஆனாலும் மேலே சொன்ன ‘உயர்ந்தவர்களாக’க் காட்டிக்கொள்ளும் அனைவரையும்விட இவர் உயர்ந்தவராகத் தெரிந்தார்.