மொட்டை!!

வேண்டுதலுக்காக மொட்டை ஏன் அடிக்கறாங்க? சாமிக்கு ஏன் முடியைக் கொடுக்கணும்? உண்டியல்ல காசு போட்டா அதுல ஒன்னு ரெண்டு சதவீதம் கோவிலுக்குப் போகுது. ஆடு கோழி பலி கொடுத்தா பிரியாணி கெடைக்குது. முடியைக் கொடுக்கறதால என்ன பயன்?

‘முருகா! என் புள்ளை எப்படியாவது பத்தாவது பாஸ் பண்ணிட்டா, பழநி-க்கு வந்து அவனுக்கு மொட்டை போடறேன்பா!’. உடல் நலம் இல்லாதபோது வேண்டப்படும் வேண்டுதல்கள்தான் அதிகமா இருக்கும்னு நெனைக்கறேன். என் மகனை எப்புடியாவது காப்பாத்திடு, மகளை குணப்படுத்திடு இப்டி பல வேண்டுதல்களோட பேர்ல மொட்டைகள் போட்டுக்கறாங்க. உசிறயே கொடுத்த கடவுளுக்கு ஏன் மக்கள் வெறும்ம்ம் முடியை மட்டும் தர்றாங்க-ங்கறது கொஞ்சம் வியப்பாதான் இருக்கு.

மொட்டை போட்டுக்கறதா ஏன் மக்கள் வேண்டிக்கறாங்க-ன்னு யோசிச்சதுல..

1. முடிசூட்டு விழா நாளில் ‘தன் மகன் இளவரசன் ‘சும்மாஒருபேரு சோழன்’ சிறப்பாக ஆட்சி செய்ய வேண்டும்’ என்று இறைவனை வேண்டி தன் (மணி)முடியை இழந்தார், நம் மன்னர் ராஜாதிராஜ, ராஜ குல திலக, ராஜ பராக்ரம ‘சும்மாஇன்னொருபேரு சோழன்’-ன்னு அந்தக் காலங்கள்ல தண்டோரா போட்டதை மக்கள் தப்பா புரிஞ்சிட்ருப்பாங்களோ?

2. அந்தக் காலத்துல இப்போ இருக்கற மாதிரி க்ராப் கட்டிங்-லாம் இல்லாம எல்லோருமே பாகவதர் ஸ்டைல்ல முடி வெச்சிட்டு இருந்ததாலயும், ஷாம்பூக்கள் கண்டிஷனர்கள்-லாம் இல்லாததுனாலயும் தலைல வர்ற ப்ரச்சனைகளுக்கெல்லாம், ‘பாதாள பைரவி’ கோவில்ல போயி வேண்டிக்கிட்டு மொட்டை அடிச்சுக்கோ எல்லாம் சரியாய்டும்-னு சொன்னதுல ஆரம்பிச்சு எல்லாத்துக்கும் மொட்டை அடிக்க ஆரம்பிச்சுட்டாங்களோ!?

இப்டி பல யோசனைகள்.

என்னடா இவன் ஏன் திடீர்னு மொட்டையப் பத்தி யோசிக்கறான்னு நெனைக்கறீங்கதான?

மொட்டை எங்க அம்மம்மா,(அம்மாவோட அம்மா) அவங்களோட வேண்டுதல் ஒன்னை நிறைவேத்தறதுக்காக போன ஞாயிற்றுக்கிழமை காலைல வினாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார்க்கு அபிஷேகம் பண்ணிட்டு அவசரமா கிளம்பி போயி மொட்டை போட்டுக்கிட்டேன். முத்துப்பேட்டை ‘தர்கா‘வுல.

தர்கால போயி மொட்டைன்னதும், அவங்களுக்கு இதுமாதிரி வேண்டுதல்கள்-லாம் தெரியுமோ தெரியாதோ-ன்னு நெனைச்சுகிட்டே, தர்கா அதிகாரி மாதிரி இருந்த ஒருத்தர்கிட்ட, கொஞ்சம் தயங்கித் தயங்கி, தர்கா‘சலாம் அலைக்கும் பாய், ஒரு வேண்டுதலுக்காக மொட்டை அடிக்கணும்’-னேன். அவர் கொஞ்சமும் தயங்காம, ‘அதோ அவர்கிட்ட போயி 11.25 ரூபாய் கொடுத்துட்டு சீட்டு வாங்கிட்டு வந்துடுங்க, அடிச்சிடலாம்’-னார்.
கொஞ்ச நேரத்துல குங்குமப்பொட்டு வெச்சுக்கிட்டு ஒருத்தர் வந்து மொட்டை அடிச்சு விட்டாரு. அடிச்சு முடிச்சப்புறம் ‘எவ்ளோ குடுக்கணும்’-ன்னு கேட்டதுக்கு,
‘தர்கால முடி எடுக்க வர்றவங்ககிட்ட இவ்ளோ குடுங்கன்னு கேட்கறதில்லை சார்’
‘அஞ்சோ பத்தோ எது குடுத்தாலும் வாங்கிப்பேன் சார்.’-ன்னாரு. கொடுத்ததை வாங்கிக்கிட்டு போய்ட்டாரு.

கோவிலா இருந்தாலும் தர்காவா இருந்தாலும் மக்களோட நம்பிக்கை ஒன்னுதான்னு நெனைச்சுகிட்டு, எங்க அம்மம்மாவோட வேண்டுதலை நிறைவேத்தின ஆண்டவனுக்கு மனசார நன்றியைச் சொல்லிட்டு கிளம்பினேன்.