ஞாயிறு மாலைகள்.

பல மருத்துவ சின்ரோம்கள் மாதிரி ஞாயிறு மாலை சின்ரோம்னு ஒன்னு இருக்கறதாகத்தான் தோனுது. அப்படி ஒரு வெறுமை ஞாயிறு மாலைகள்ல சில நேரம் இருக்கும். அதுவும் தனியா இருக்கும்போது அதிகமாயிருக்குமோ என்னவோ. இன்னிக்கு மாலைல அப்படி இருக்கும்போது அதுக்கு என்னதான் காரணமா இருக்கும்-னு யோசிக்கறேன்.
அடுத்தநாள் காலைல அலுவலகம் போகணுமே-ங்கற கவலையா?
வீட்டையும் உறவுகளையும் விட்டு வெகுதூரம் வந்திருக்கோமே-ங்கற உணர்வா?
சனி ஞாயிற்றுக்கிழமைகள்ல கடை கடையா ஏறி அலைஞ்ச களைப்பா?
மனதளவுல மட்டும் இல்லை. உடலளவுலையும், தலைக்குள்ள தண்ணீர் புகுந்துகிட்ட மாதிரி ஒரு உணர்வு ஏன் ஏற்படுது?
உற்ற நண்பர்கள்கிட்ட இருந்துகூட விலகி கொஞ்சம் தனிமைய மனம் விரும்புதே, அது ஏன்?
ரகுமானின் இசையையும் ஸ்வர்ணலதாவின் குரலினிமையையும் மட்டுமே காட்டிக்கொண்டிருந்த ‘எவனோ ஒருவன் வாசிக்கிறான்’ இன்று வைரமுத்துவை அழைத்து பக்கத்திலும், கண்ணீரை அழைத்து இமைகளோரத்திலும் உக்கார வைத்திருக்கின்றதே அது ஏன்?
இந்த உணர்வுகள், மதியம் சாப்டதுக்கப்புறம் ஒரு குட்டித் தூக்கம் போட்டுட்டா இன்னும் ஏன் அதிகமாகணும்?
என்ன காரணமா இருக்கும்? உங்களுக்கு ஏதாவது தோனுதா?