இது முதன் முதலா வரும் பாட்டு…

நாம் அமெரிக்கால இருந்த காலங்கள்ல ரொம்பவே மிஸ் பண்ணினது சென்னை டிசம்பர் சீசனை. எனக்குத் தெரிஞ்சவங்க யாரவது கச்சேரிக்குப் போய்ட்டு வந்தா அவங்களைத் தொலைபேசில கூப்டு, ‘என்னென்ன கீர்த்தனைகள் பாடினாங்க, புதுசா என்ன பாடினாங்க, எந்த ராகம் மெயின், எது சப் மெயின், ராகம் தானம் பல்லவியா, துக்கடா.. தில்லானா..’-னு கேள்வியா கேட்டுத் தொளைப்பேன். ஜெயா டிவி-ல ‘மார்கழி மகா உற்சவம்’ ஒளிபரப்ப ஆரம்பிச்சப்புறம், டிசம்பர் சீசன் சென்னையைத் தாண்டி தமிழ்நாடு முழுக்க பரவின மாதிரி இருந்துச்சு. இருந்தாலும் அமெரிக்கால இருந்த எனக்கு எட்டாக்கனியாதான் இருந்துச்சு. யாராவது டிவில இருந்து பதிவெடுத்து கூகுள் வீடியோ-ல அப்லோட் பண்ண மாட்டாங்களா-ன்னு தேடியிருக்கேன்.

இப்போ நான் சென்னைல இருக்கறதுனால, டிவில இருந்து பதிவெடுக்க சிறப்பு சாதனங்கள்லாம் வாங்கி, ‘மார்கழி மகா உற்சவம்’ நிகழ்ச்சிகளைப் பதிவு செஞ்சு ‘YouTube’-ல போடறேன். ஆனா, ‘YouTube’-ல ஒரு நிபந்தனை. எந்த வீடியோ க்ளிப்பும் பத்து(10:59) நிமிடத்துக்கு மேல இருக்ககூடாது. கர்னாடக இசைக் கச்சேரிகள பத்து நிமிஷ வீடியோ க்ளிப்புகளா போடறது அவ்ளோ சுலபமான வேலையா இல்லை. ராகம், கீர்த்தனை, நிரவல், ஸ்வரம், தனி-ன்னு இது எல்லாமே ஒன்னோட ஒன்னு இழைஞ்சிருக்கும். ஒரே இலைல பரிமாறி வெச்சிருக்கற தஞ்சாவூர் ஸ்பெஷல் மீல்ஸ் மாதிரி. சாம்பாரை இந்த இலைல சாப்டுட்டு ரசத்தை அடுத்த பந்தில சாப்டுங்க-ன்னு சொன்னா எப்டி இருக்குமோ அப்டி இருக்கும், ஒரு கர்னாடக இசைப் பாடலோட ராகத்தை அல்லது பாதி ராகத்தை மட்டும் ஒரு க்ளிப்ல பாரு, மீதியை அடுத்தக் க்ளிப்ல பாரு-ன்னு சொல்றது.

முடிஞ்ச வரைக்கும் எடிட் பண்ணி ஒவ்வொரு பத்து நிமிட க்ளிப்பையும் நிறைவோட கொடுக்கணும்-னு முயற்சி செஞ்சாலும், சில நேரத்துல இந்த நிபந்தனை கொஞ்சம் எரிச்சலூட்டத்தான் செய்யுது.

எந்த நிபந்தனைகளும் இல்லாம, இந்திய இசைக்கு மட்டுமே-ன்னு ஒரு வலைப் பிண்ணனும்-ங்கற ஆசையோட முதல் படி!!
இந்த வலைல இருந்தே வரும் முதல் பாட்டு..
பாட்டு உங்களுக்கும் தெரியுதா? கேட்குதா?

அடுத்தப் படிக்குப் போற வரைக்கும் பாட்டை நிறுத்தி வெச்சிருக்கேன்.