நெருடல்கள்.

நான் படித்தவரை, மறைநூல்கள் பெரும்பாலும், ‘தவறு செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் நரகம் நிச்சயம் என்றே கூறுகின்றன’. நல்லதைச் செய்யுங்கள் என்பதைவிட, தீமையை செய்தால் நரகம் என்பதையே அதிகமாக வலியுறுத்துகின்றன. நரகத்தில் அளிக்கப்படும் தண்டனைகள் பற்றி பயப்படும் விதமாக விவரித்துக்கூறி, மக்களிடையே அச்சத்தை உண்டாக்கி அதன் மூலம் அமைதியை நிலைநாட்டும் விதத்திலேயே அமைந்திருக்கின்றன. அமைதியை நிலைநாட்டும் எண்ணம் சரிதான். இருந்தாலும் நரகத்தின் மீது ஏற்படுத்தும் பயத்தினால் அடைய நினைப்பது சரியா என்றுதான் தெரியவில்லை. உலகில் நல்லவர்களாக இருப்பவர்களில் எத்தனைபேர் நரகத்திற்கு பயந்து நல்லவர்களாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? அதேபோல, தீய செயல்களை செய்துகொண்டிருப்பவர்கள் எத்தனைபேர் நரகத்திற்கு அஞ்சுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

உயிர்களை மதித்து, பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் ஏன் இருக்கக்கூடாது. நரகத்திற்கு பயந்து மட்டும் தீமைசெய்யாமல் இருக்கச்சொல்லி ஏன் சொல்லவேண்டும்.

மறை நூல்களைப் படிக்கும்பொழுது எனது நோக்கம் நல்ல விஷயங்களை தெரிந்துகொள்வதுதான். நரகத்தைப் பற்றியல்லவே. இறைவன் மீதும், பிரார்த்தனை மீதும் மிகுந்த நம்பிக்கை உள்ளவன் நான் என்றாலும், நரகத்தைப் பற்றி மறை நூல்கள் கூறும் கருத்துகளை ஏற்க மனம் மறுக்கிறது.

இன்னொரு பார்வையில், மறை நூல்கள் எழுதப்பட்ட காலங்களில் அவை சரியானவைகளாக இருந்திருக்கலாம். மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தினால் மட்டுமே ஒழுங்கான பாதையில் நடத்திச் செல்ல முடிந்திருக்கலாம். ஆனால் இந்த காலத்திற்கு அவை பொருந்துகின்றனவா??