குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.

பொருள் : மற்றவர்களுடைய குறைகளை மறைத்து நிறைகளை மட்டும் காண்பதுதான் பெருமைக்குரிய குணமாகும். மற்றவர்களின் குறைகளை மட்டும் காண்பது சிறுமைக்குரிய செயலாகும்.

கொற சொல்றது ரொம்ப ஈசி-ங்க. யார வேணாலும் எப்போ வேணாலும் கொற சொல்லலாம். ‘குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்’-னு ‘திருவிளையாடல்’ சினிமா-ல ‘தருமி’ நாகேஷ் சொல்றமாதிரி, குத்தம் சொல்றவங்க எல்லா எடத்துலயும் இருக்காங்க. ஆனா கொற சொல்றதால என்னங்க லாபம்? ஒருசில இடங்கள்-ல, கொற சொல்றதுனால என்ன ஆகுது-னு பாக்கலாமா??

இடம் 1: அலுவலகம்.
ஒரு ஆபீஸ்ல நான் சேர்ந்த புதுசு-ங்க. எனக்கு எல்லாம் தெரியும்-ங்கற நெனப்பு. புதுசா சேர்ந்திருக்கறதால, மேனேஜர்-ட்ட நல்ல பேருவேற வாங்கணும். அதுனால, எந்த மீட்டிங் போனாலும், நான் சொல்றத தான் எல்லோரும் கேட்கணும்-ங்கறதுக்காக, யார் எது சொன்னாலும் ஏதாவது ஒரு குத்தம் கண்டுபுடிச்சேன். கொற சொன்னேன். மேனேஜருக்கு என்மேல ஒரு மதிப்பு வந்துச்சு-ங்கறது உண்மதான். ஆனா, என் கூட வேல பாக்கற ஒருத்தரும் எனக்கு நண்பர்களா இல்ல. நான் சொல்ற ஐடியாவையே என் மேனேஜரே கேட்டாலும், கூட வேலபாக்கறவங்களோட சேந்து செஞ்சாதான வேலைய முடிக்க முடியும். நான் அவங்க ஐடியால கொற சொன்னதால அவங்க என் ஐடியால கொற கண்டுபிடிச்சாங்க.
இப்படி மாத்தி மாத்தி கொற சொல்றதுலயே ரெண்டு மூனு வாரம் போய்ட்டதால வேற வேல எதுவும் நடக்கல. அதுனால, உக்காந்து மத்தவங்க சொன்ன ஐடியாக்கும் என்னோட ஐடியாக்கும் அப்படி என்னதான் வித்தியாசம், அவங்க ஐடியால இருக்கற நன்மைகள் என்னென்ன?, என்னோடதுல இருக்கற நன்மைகள் என்னென்ன?, குறைகள் என்னென்ன-னெல்லாம் பார்த்தேன். அப்புறம் மேனேஜர்கிட்ட போகாம, கூட வேல பாக்கறவங்களோட உக்காந்து விவாதிச்சேன். இந்தத்தடவ ஒரே ஒரு வித்தியாசம், மத்தவங்களோட ஐடியால இருந்த நல்ல விஷயங்களையும் பார்த்தேன். அதுக்காக அவங்கள பாராட்டினேன். அப்புறமா, என் ஐடியால இருந்த நல்ல விஷயங்கள சொன்னேன், குறைகளையும் சொன்னேன். எல்லாத்தையும் கேட்டாங்க. என்னொட ஐடியால இருந்த நல்ல விஷயங்கள பாராட்டினாங்க. அவங்க ஐடியால நெறயா நன்மைகள் இருந்ததால அவங்க ஐடியாவையே செயல்படுத்தினோம். ஆனாலும் என்னோட மதிப்பு கொறயல. என்னிக்கு என் டீம்ல இருக்கற எல்லோறையும் மதிக்க ஆரம்பிச்சேனோ, அன்னில இருந்து என் மதிப்பும் அதிகமாச்சு. பின்னாடி செஞ்ச வேற வேலைகள்ல என்னோட ஐடியாவையும் பயன்படுத்தினோம். ஆனாலும் எல்லோரும் ஒரே அணியா செயல்பட்டோம்.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குணம்-ங்க. ஆனா பொதுவான விஷயம், எல்லார்கிட்டயும் கொற இருக்கு. நாம எப்பொ மத்தவங்க கொறைகள மட்டும் பாக்கறோமோ, அவங்களும் நம்மோட கொறைகள மட்டும்தான் பாப்பாங்க. எப்போ மாத்தி மாத்தி கொறைகள பாத்துக்கறோமோ. அப்போ ‘ஒரு வேலயும்’ நடக்காது. நாம நிறைகள பாக்கும் பொழுது, மத்தவங்களும் நம்மோட நிறைகள பாப்பாங்க. குறைகள் இருந்தாலும் அதப் போக்க ஒரு அணியே உங்ககூட இருக்கும். யோசிச்சுப் பாருங்க.

தராசுத் தட்டு மாதிரி உங்க ரெண்டு கையையும் வெச்சுகோங்க. ஒரு கைல மத்தவங்களோட குறைகள் மற்றும் உங்க குறைகள். இன்னொரு கைல, மத்தவங்களோட நிறைகள் மற்றும் உங்களோட நிறைகள். எதுக்கு பலம் அதிகம்???

இடம் 2: நண்பர்களுக்கு இடையே.
நண்பர்களுக்குள்ள ஒரு பழக்கம் இருக்குங்க. கொறைகளை சொல்லி கிண்டல் பண்றது. அது தப்பில்ல. கிண்டல் பண்ணினா ஒரே கல கல-ன்னு இருக்கும். சந்தோஷமா இருக்கும். ஜாலியா இருக்கும். ஆனா அதோட நிறுத்திடக் கூடாது-ங்க. நல்ல விஷயங்களைப் பத்தியும் பேசணும். பாராட்டணும். அத செய்யாம வெறும் கிண்டல் மட்டுமே பண்ணிட்டிருந்தோம்ன, நாலஞ்சு தடவைக்கு அப்புறம் கோவம்தான் வரும். நட்புல விரிசல் விழலாம். இது தேவையாங்க??

இடம் 3. குடும்பம்.
குடும்பத்திலேயும் இதேதாங்க. மனைவியிடமோ, குழந்தைகளிடமோ, உறவினர்களிடமோ, கொறைகளை மட்டும் பாத்துகிட்டு இருக்கறது நல்லது இல்லங்க. உங்கமேல ஒரு வெறுப்பதான் அது ஏற்படுத்தும். ‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’-னு ஔவையார்கூட சொல்லியிருக்காங்க. முக்கியமா குழந்தைகள்ட இதுமாதிரி இருக்கறது ரொம்ப மோசமான விளைவுகள ஏற்படுத்த வாய்ப்பு இருக்குங்க.

இடம் 4. அரசியல். (அரசியல் இல்லாமலா?? :) )
“ஆளுங்கட்சிக்காரங்க செய்யற ‘இந்தத் திட்டம்’ மக்களுக்கு நல்ல பலனத்தரும். இந்தத் திட்டத்துக்கு எங்களோட ‘முழு ஆதரவு’ உண்டு”-னு ஒரு எதிர்கட்சி சொன்னா எப்படி இருக்கும்?
அதே மாதிரி, “எதிர்கட்சிக்காரங்க சொன்ன கருத்த அலசிப் பார்த்ததுல, ‘இந்தத் திட்டத்துனால’ மக்கள் அடையற பயனவிட, கஷ்டம் அதிகமாயிருக்கும்-ங்கறது புரியுது. அதுனால, இந்த திட்டத்த கைவிடறோம். அறிவுரை சொன்ன எதிர்கட்சித் தலைவருக்கு நன்றி தெரிவிச்சுக்கறோம்’. அப்படினு ஆளும் கட்சி சொன்னா எப்படி இருக்கும்?

யோசிச்சுப் பாருங்க! யோசிக்கிறேன்!! யோசிப்போம்!!!