மாற்றங்கள்.

மூலக்கதை Dr. Spencer Johnson எழுதிய ‘Who Moved My Cheese?’.

கோடையின் வெப்பம் வாட்டிக்கொண்டிருந்த ஒரு சனிக்கிழமையின் மதிய வேளையில், மூன்று நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விருந்தொன்று தயாராகிக்கொண்டிருந்தது. தன்னுடன் பள்ளியில் படித்த, இன்னும் தொடர்பில் உள்ள நண்பர்களையெல்லாம் விருந்திற்கு அழைத்திருந்தான், ‘அமாவாச’, ‘தயிர்சாதம்’, ‘சீனி’ என்றெல்லாம் பள்ளிக் காலங்களில் அழைக்கப்பட்ட ‘சீனிவாசன்’. இப்பொழுது அமெரிக்காவில் கம்பெனி ஒன்றின் இயக்குனராக இருக்கின்றான்.

யார் யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டு காத்திருந்தான் சீனிவாசன்.

ஒன்றரை மணியில் இருந்து ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். முதலில் வந்தது ‘ஈறுகுச்சி’ சுதாகர். ‘ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாரிட்டடா!!!’ என்றான் சீனிவாசனைப் பார்த்து.

பிறகு ‘சந்தனப்பொட்டு’ பாலாஜி, ‘கருவாயன்’ வெங்கடேசன், ‘சுரும்பி’ புகழேந்தி மற்றும் ‘கிளிமூக்கி’ இந்திரா என ஒவ்வொருவராக வந்தனர்.

ஒவ்வொருவரும் தம் பெற்றோர்கள் குடும்பத்தினர் பற்றி நலம் விசாரித்துக்கொண்டனர். பள்ளி நாட்களைப் பற்றிப் பேசி, கிண்டலடித்துக்கொண்டிருந்தனர். பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், கூடப் படித்த பிற நண்பர்கள், பள்ளி முடித்தபின் கடந்து வந்த பாதைகள் என அனைத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர்.

‘உன்னப் பாப்பேன்-னு நெனச்சுக்கூட பாக்கல சீனி! நேத்து தற்செயலா பாலாஜிய பாத்தப்போ நீ வர்றதா சொன்னான். அதுனாலதான் வந்தேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு’ என்றாள் இந்திரா.

‘நீ வந்தாலும் வருவ-ன்னு பாலாஜி சொன்னான். உன்ன பாத்ததுல எங்களுக்கும் சந்தோஷம்தான்’ என்றான் சீனிவாசன்.

‘இந்த பத்து வருஷத்துல வாழ்க்கைல எவ்வளவோ எதிர்பாராத மாற்றங்கள், இல்ல?’ சற்றுநேர அமைதிக்குபின் சற்றே சோர்ந்த குரலில் சொன்னாள் இந்திரா.

‘எல்லா பாடத்துலயும் மொத மார்க் வாங்குன இந்திராவா இப்படி சொல்றது?’ ஆச்சரியப்பட்டான் புகழேந்தி.

‘அதான!! கடைசி பெஞ்சுகாரங்க எங்களுக்குத்தான் எதிர்பாராத மாற்றங்கள் வரும்-னு நெனைச்சேன். உனக்குமா?’ என்றான் வெங்கடேசன் சிரித்துக்கொண்டே.

‘எதிர்பாராத மாற்றங்கள் எல்லோருக்கும்தான் வரும்!! இன்னும் என்னென்ன மாற்றங்கள் வரப்போகுதோ-னு நெனச்சா இன்னும் பயமா இருக்கு’- என்றாள் இந்திரா.

‘நானும் மாற்றங்களப் பாத்து பயந்துகிட்டுதான் இருந்தேன். ஆனா இப்போ இல்ல.’ என்ற சீனிவாசன், தொடர்ந்து ‘எங்க கம்பேனில ஒரு பெரிய மாற்றம் வர இருந்தப்போ எல்லோரும் பயந்துல மாறாமலே இருந்தோம். அப்புறம் ஒரு சிறுகதைதான் எங்க கம்பெனியோட தலயெழுத்தயே மாத்திடுச்சு’ என்றான்.

‘சிறுகதை-யா?? கம்பெனி தலயெழுத்த மாத்திடுச்சா?? அப்படியென்ன கத??’ என்றான் சுதாகர்.

‘மாற்றங்கள நாம பாக்கறவிதம் பத்தி ஒரு கத படிச்சேன். மாற்றங்கள் மேல எனக்கு இருந்த பயத்த அது போக்கிடுச்சு. அப்புறம் அந்தக் கதய என்னோட கம்பெனில இருந்தவங்கள்-டயும் சொன்னேன். எங்க எல்லோருக்கும் ஒரு புதிய பார்வை கெடச்ச மாதிரி ஒரு அனுபவம். அப்புறம் ஏற்பட்ட மாற்றங்களால எங்க கம்பெனி பெரிய லெவல்-ல உயர்ந்துடுச்சு’ என்றான் சீனிவாசன்.

‘அதென்ன சீனி அப்படியொரு கத? எங்களுக்கும் சொல்லேன்’ அனைவரும் கேட்டனர்.

‘கண்டிப்பா சொல்றேன்’. கொஞ்சம் ஜுஸ் குடித்துவிட்டு சொல்ல ஆரம்பித்தான் சீனிவாசன்.

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15